My50 பயண அட்டை ஒரு வரப்பிரசாதமாகும்

பிப்.7-

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பயனர்கள் குறிப்பாக பொது போக்குவரத்தை பயன்பயன்படுத்துபவர்கள், 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் சலுகைகளில் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாதாந்திர “My50” பயண அட்டை யைப் பார்க்கின்றனர்.

கிள்ளாள் பள்ளத்தாக்குப் பகுதியில் பிரசன்னா நிறுவனத்தினால் வழிநடத்தப்படும் எல்ஆர்டி, எம்ஆர்டி, மோனோரயில், பிஆர்டி முதலிய பொதுபோக்குவரத்தான பேருந்து மற்றும் ரயில் சேவைகளில் 30 நாள் வரையறையற்ற பயணத்தை ஒரே விலையில் பயணிகள் மேற்கொள்ள முடியும் என்ற My50 சலுகை இவ்வாண்டிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவதற்கு 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் வகை செய்யப்பட்டு இருப்பதை பலர் வரவேற்றுள்ளனர்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி தனது முகநூலில் வெளியிட்ட அறிக்கையின்படி மாதம் ஒன்றுக்கு சுமார் 226,000 பேர், My50 பயண அட்டையைப் பயன்படுத்தி, பிரசன்னாவின் பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பட்டுள்ளார்.

My50 பயண அட்டை சலுகை, 2025 பட்ஜெட்டில் மடானி அரசாங்கம் தொடர்ந்து நீடித்து இருப்பது மூலம் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டிலும் அதிகரிக்கும் என்று அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இத்தகைய சலுகையை வழங்கியிருப்பது மூலம் பொது மக்கள் குறைந்த கட்டணத்தில் நிறைவான போக்குவரத்து சேவையை அனுபவிக்க முடிகிறது என்பதுடன் கிள்ளான் பள்ளத்தாக்கில் வாகன நெரிசலையும் குறைக்க முடிகிறது என்று அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

மக்கள் நலன் முன்னெடுக்கப்பட்டுள்ளது

போக்குவரத்து அமைச்சரின் இந்த வாதம் உண்மையே என்கின்றனர் “My50” பயண அட்டையை உபயோகித்து வரும் பயனர்கள். அரசாங்கம் வழங்கியுள்ள இந்த சலுகை மக்களின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள ஓர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாகும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

My50 பயண அட்டையானது ரேபிட் கேஎல் லைட் ரெயில் டிரான்சிட் (எல்ஆர்டி), மாஸ் டிரான்சிட் (எம்ஆர்டி), மோனோரயில், பஸ் ரேபிட் டிரான்சிட் (பிஆர்டி), ரேபிட் கேஎல் பேருந்துகள் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பேருந்துகளில் 30 நாட்களுக்கு வரம்பற்ற பயணத்தை வழங்குகிறது.

பொதுப் போக்குவரத்தின் எளிமை மற்றும் நல்வாழ்வுக்காகப் போராடும் மக்களுக்கு, My50 பயண அட்டை சலுகை தொடர்ச்சியாக நீட்டிக்கப்ட்டு இருப்பது, தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்தாமல் பொதுப் போக்குவரத்துப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் ஒரு திட்டமாக கருதப்படுகிறது.

My50 பயண அட்டை சலுகையானது குறைந்த வருமான கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் போன்றவர்கள் பெரிதும் பயனடைகிறார்கள்.

இந்த சலுகை அபாரமானது

இந்த சலுகை அபாரமானது. மாதந்தோறும் 50 ரிங்கிட் என்ற மிகக் குறைந்த கட்டணத்தில் வரம்பற்ற பயணங்களை அனுபவிக்க முடியும் என்கிறார் மலாயாப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயிலும் மாணவி குமாரி தமிழீழ மங்கை.

இது பயணச் செலவுகளைக் குறைக்கவும், குறிப்பாக பொது போக்குவரத்தைத் தினமும் பயன்படுத்தும் தம்மைப் போன்றோருக்குப் பெரிதும் உதவுகிறது என்றார். தனித்தனி பற்றுச்சீட்டுகளையோ அட்டைகளையோ வாங்க, தொகை அதிகரிப்பு செய்ய அவசியமில்லை என்கிறார் அவர்.

பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் My50 பயண அட்டை உதவுகிறது. தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து பொது போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது எனவும் தமிழீழ மங்கை குறிப்பிட்டார்.

பயணச் செலவுகளை குறைக்கிறது

பயண அட்டை, குறிப்பாக மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் தலைநகரைச் சேர்ந்த சுமித்திரா காளீஸ்வரன்.
இது தம்மைப் போல் அன்றாடம் வேலைக்குச் செல்பவர்களுக்கு பயணச் செலவுகளைக் குறைத்து, நிதி நிலைமையை மேம்படுத்த உதவுகிறதாகத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், பத்துமலை வட்டாரத்தில் இருந்து கோலாலம்பூருக்கு வேலைக்குச் செல்லும்போதும் சரி, தற்போது கோலாலம்பூரில் இருந்து கொண்டே சுற்று வட்டாரப் பகுதிகளுக்குப் பயணிக்கும்போதும் சரி, My50 பயண அட்டை மிகவும் உதவியாக இருப்பதாகவும் சுமித்திரா கூறினார்.

சுருங்கக் கூறின், My50 என்பது கோலாலம்பூர், சிலாங்கூர் பொதுப் போக்குவரத்தை மலிவாகவும் வசதியாகவும் பயன்படுத்த உதவும் ஒரு மாதாந்திர பயண அட்டை முறை. இது பயணச் செலவுகளைக் குறைக்கவும், பயணத்தை எளிதாக்கவும் உதவுகிறது. இந்தத் திட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள ஒரு முயற்சியாகும் என்கிறார் சுமித்திரா

சுற்றுச்சூழலுக்கு நட்புறவாக உள்ளது

தினமும் My50 பயன அட்டையை பயன்படுத்துபவர்களுக்கு போக்குவரத்து செலவுகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், பயனர்கள் அவசரமான சூழலில் கட்டணத்தை நிரப்ப வேண்டுமே என்று கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் வரம்பற்ற பயணத்தால் My50 பயண அட்டை 30 நாள் தாங்க வல்லதாகும் என்கிறார் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றும் எம். தாமோதரன்.

அரசாங்கம் வழங்கிய இந்த சலுகையின் மூலம் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதில் இருந்து மக்கள் பொதுப் போக்குவரத்திற்கு மாறுவதற்கு இந்த நடவடிக்கை பெரும் பங்காற்றி வருகிறது. மோட்டார் சைக்கிள் பயணத்தை தவிர்த்து இது போன்ற பொது போக்குவரத்தை பயன்பத்துபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

குறிப்பாக, சாலையில் அதிக வாகனங்களின் எண்ணிக்கையினால் விபத்துகள் நிகழலாம். அதுமட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு மாசுப்பாடு ஏற்படுத்தும் வாகனங்களால் வெளியேற்றக்கூடிய கரியமிளவாயு குறைவதற்கு இந்த திட்டம் பெரும் ஊக்குவிப்பாக அமையும். சுற்றுச்சூழலுக்கும் நட்புறவாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்..

அதிக செலவு செய்ய வேண்டியதில்லை

குடும்ப மாதுவான 35 வயது செந்தாமரை கூறுகையில் தினமும் சுபாங் ஜெயாவிலிருந்து காஜாங்கிற்கு செல்ல எல்ஆர்டி மற்றும் எம்ஆர்டி.யைப் பயன்படுத்துவதால், பயண டிக்கெட்டுகளுக்கு அதிக செலவிட்ட காலமும் இருந்தது.

வழக்கமாக நான் பயண டிக்கெட்டுக்காக ஒரு நாளைக்கு சுமார் RM10 செலுத்த வேண்டும். தினமும் காஜாங்கில் உள்ள என் அம்மாவை நான் கவனித்துக் கொள்ள வேண்டும் ஆனால், தற்போது அதிக செலவின்றி, My50 அட்டை, பல்வேறு இடங்களுக்குச் செல்ல உதவியாகவும், விரைவாகவும் உள்ளது என்கிறார் அந்த குடும்ப மாது.

இந்த முயற்சியை ரேபிட் கே.எல் மூலம் தொடர்வதற்கு முன்னெடுத்த மடானி அரசாங்கத்தை வெகுவாக பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என்று செந்தாமரை குறிப்பிடுகிறார்.

அலைச்சல் வெகுவாக குறைந்துள்ளது

மல்டிமீடியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தினகரன் சுப்பிரமணியம் கூறுகையில் சைபர்ஜெயாவிற்கு செல்ல முன்பு நான் காரை பயன்படுத்தினேன். கோலாலம்பூர், அம்பாங்கிலிருந்து கம்போங் பண்டானிலிருந்து சைபர் ஜெயாவிற்கு செல்ல பெட்ரோல், டோல் கட்டணம் என நாள் ஒன்றுக்கு சராசரி 25 முதல் 30 ரிங்கிட் வரை செலவு செய்ய நேரிடும்.

சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டால், பெட்ரோல் தேவை அதிகமாகும். தவிர வாகன நெரிசலில் சிக்கி, பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்குள் போதும்…… போதும் ஆகிவிடும். சில வேளையில் குறித்த நேரத்திற்கு பல்லைக்கழகத்திற்கு செல்ல முடியாது.

இந்நிலையில்தான் என்னுடன் பயிலும் மாணவர்களின் அறிவுறுத்தலுக்கு இணைங்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் My50 பயன அட்டையைப் பயன்படுத்தத் தொடங்கினேன். அம்பாங்கிலிருந்து சைபர் ஜெயாவிற்கு செல்ல எல்.ஆர்.டி. மற்றும் எம்.ஆர்.டி. என இரண்டு ரயில்களை எடுக்க வேண்டும். சைபர்ஜெயா சிட்டி சென்டர் MRT நிலையத்திற்கு, அங்கிருந்து பேருந்து மூலம் பல்கலைக்கழகத்தை சென்றடைய முடிகிறது.

ஒரே கட்டணத்தில் மூன்று வெவ்வேறு போக்குவரத்தை பயன்படுத்தி, பல்லைக்கழகத்தை சென்றடைவதற்கு ரேபிட் KL பொது போக்குவரத்திற்காக நான் ஒதுக்க வேண்டிய கட்டணம் வெறும் 50 ரிங்கிட்தான். மிக எளிதாகவும் சிக்கனமாகவும் உள்ளது.

இப்போது என்னால் குறித்த நேரத்தில் பல்லைக்கழகத்திற்கு செல்ல முடிகிறது. மாதம் ஒன்றுக்கு என்னால் சராசரி 350 ரிங்கிட் முதல் 400 ரிங்கிட் வரை சேமிக்க முடிகிறது. இவ்வாறு சேமிக்கக்கூடிய பணத்தை பல்கலைக்கழகத்தின் படிப்பு தொடர்புடைய இதர தேவைகளுக்கு என்னால் நிறைவாக பயன்படுத்த முடிகிறது. பல்கலைக்கழக கண்டீனில் விருப்பமான உணவை தேர்வு செய்து உண்ண முடிகிறது.

அதிக அலைச்சல் இல்லை. வாகன நெரிசலுக்கு பயந்து கொண்டு அதிகாலையிலேயே பயணம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மன உளைச்சல் இல்லை. முன்பு இருந்த பதற்றம் இப்போது எனக்கு இல்லை.

2025 பட்ஜெட்டில் My50 பயண அட்டைக்கான சலுகை தொடரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த போது, அதிகமாக மகிழ்ச்சி அடைந்த நபர், நானாகத்தான் இருக்க முடியும். உண்மையிலேயே என்னைப் போன்ற மாணவர்களுக்கு My50 பயண அட்டை ஒரு வரப்பிரசாதமாகும் என்கிறார் தினகரன் சுப்பிரமணியம்.

அரசாங்கம் அறிவித்த My50 பயண அட்டை அனைவரும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்குமாறு நான் பரிந்துரைக்கிறேன். , ஏனெனில் இது சுலபமாக அணுகக்கூடியது மற்றும் மிக மலிவானது” என்று தினகரன் குறிப்பிட்டார்.

சுங்கைப் பூலோவில் தொழிற்சாலை ஆப்ரேட்டராக வேலை செய்யும் திருமதி பூங்காவனம் கூறுகையில் My50 பயண அட்டையை பயன்படுத்துவது மூலம் போக்குவரத்திற்காக அனுதினமும் பணத்தை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 30 நாள் வரை ராபிட் கே.எல். போக்குவரத்து சேவையை எத்தனை முறை வேண்டுமானால் பயன்படுத்த முடியும்.

தவிர அட்டையை புதுப்பிப்பதற்கு அலைய வேண்டிய அவசியமில்லை. ஆர்.டி, எம்.ஆர்.டி, மோனோரெயில், பி.ஆர்.டி நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பஸ் மையங்களில் உள்ள அனைத்து வாடிக்கையாளர் சேவை முகப்பிடங்களிலும் புதுப்பித்தல் செய்துகொள்ளலாம். இந்த அட்டையை 2025 ஆம் ஆண்டிலும் வரையறையற்ற பயணத்துடன் 50 ரிங்கிட் கட்டணத்தில் 30 நாட்களுக்கு பயன்படுத்த அரசாங்கம் அனுமதித்து இருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும் என்று பூங்காவனம் கூறுகிறார்.

மக்களின் போக்குவரத்து செலவுச் சுமையைக் குறைக்கும் ஒரு வழியாக My50 பயண அட்டை மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கும் அரசாங்கத்திற்கு பொதுவாக பொது போக்குவரத்துப் பயனர்கள் தங்கள் நன்றியை பதிவு செய்ததுடன் சாமானிய மக்களுக்கு குறைந் செலவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் தொடரப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த My50 பயண அட்டை சலுகைக்காக 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 216 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகையானது, மலேசிய குடும்பத்தின் அபிலாஷைகளுக்கு ஏற்ப மக்கள் நலன் மற்றும் நல்வாழ்வில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதையே காட்டுகிறது.

WATCH OUR LATEST NEWS