மூதாட்டி கொலை : இருவர் கைது

ஜோகூர் பாரு, பிப்.7

ஜோகூர்பாரு, தாமான் ஶ்ரீ ஸ்கூடாயில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 24 மணி நேரத்தில் இரண்டு சந்தேகப் பேர்வழிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலை தொடர்பான தகவலைப் பெற்ற அடுத்த கணமே சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டதாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் தெரிவித்தார்.

மூதாட்டியின் கொலை தொடர்பில் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட அவரின் வாரிசுதாரரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது.

51 மற்றும் 58 வயதுடைய ஒரு ஆணும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். புலன் விசாரணைக்கு உதவும் வகையில் கைப்பேசி, இரண்டு அடகுக்கடை ரசீதுகள், சிம் கார்ட் முதலிய பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர் என்று பல்வீர் சிங் குறிப்பிட்டார்.

79 வயதுடைய அந்த மாது, கடந்த புதன்கிழமை வீட்டில் இறந்து விட்டதாக புகார் பெறப்பட்டது. போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் அந்த மூதாட்டிக்கு சொந்தமான சில பொருட்கள் காணாதது குறித்து கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் மரணம் கொலை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக பல்வீர் சிங் தெரிவித்தார்.

பிடிபட்ட இரு நபர்களில் ஒருவர், ஏற்கனவே குற்றப்பதிவுகள் கொண்டு இருப்பது தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS