கோலாலம்பூர், பிப்.7
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி சீனப்புத்தாண்டு அன்று காலை 6.20 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமாவில் ஒரு கேளிக்கை மையத்தின் முன்புறம், வாகனத்தை மிக அபாயகரமான செலுத்தி, இதர வாகனங்களை மோதி அராஜகம் புரிந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
18 மற்றும் 26 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு இளைஞர்களும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கும், இன்று அதிகாலை 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கோலாலம்பூர் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா தெரிவித்தார்.
அந்த இருவரையும் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி வரையில் தடுப்புக்காவலில் வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைப் போலீசார் இன்று பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூன்று இளைஞர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
27 வயது R. தீபன் ராஜ், 19 வயது S. ஜீவன் மற்றும் வயது குறைந்த இளைஞர் ஒருவர் ஆகிய மூன்று நபர்கள் இன்னும் பிடிபடாமல் இருக்கும் சிலருடன் சேர்ந்து இந்த அராஜகத்தை புரிந்ததுடன் தங்கள் வசம் கத்தி வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இவர்கள் புரிந்த இந்த அராஜக செயல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.