ஜார்ஜ்டவுன், பிப்.7-
ஆறாம் படிவ மாணவன் T. நவீன் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நால்வர், எதிர்வாதம் புரிய வேண்டும் என்று அப்பீல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, அந்த நால்வர் மீதான விசாரணை வரும் ஜுலை 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை நடைபெறுவதற்கான தேதியை பினாங்கு, ஜார்ஜ்டவுன், உயர் நீதிமன்றம் இன்று நிர்ணயித்துள்ளது.
நவீனை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட 22 வயது J. ராகசுதன், 22 வயது S. கோகுலன் மற்றும் கொலை நிகழ்ந்த போது குறைந்த வயதுடைய மேலும் இரு இந்திய இளைஞர்கள் என நால்வர், இந்த கொலையை புரிந்துள்ளனர் என்பதற்கு அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதாக கடந்த ஜனவரி 13 ஆம் தேதி புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த நால்வரும் பினாங்கு உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான கொலை குற்றச்சாட்டை எதிர்த்து எதிர்வாதம் புரிய வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி சே ருசிமா கசாலி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுன் 9 ஆம் தேதி நள்ளிரவு, பினாங்கு, புகிட் கெலுகோரில் உள்ள ஒரு பூங்காவில் கும்பல் ஒன்றினால் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவன் நவீன், சுயநினைவு இழந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
எதிர்வாதம் புரியும்படி உத்தரவிடப்பட்டுள்ள அந்த நால்வர் மீதான வழக்கு விசாரணை, பினாங்கு உயர் நீதிமன்ற நீதிபதி ரட்சி அப்துல் ஹாமிட் முன்னிலையில் நடைபெறும்.