மாணவர்களை மானபங்கம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், பிப்.7-

தன்னிடம் கல்விப் பயிலும் 11 வயது இரண்டு மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் தன் வசம், சிறார்களை சித்ரவதை செய்யும் 180 படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்ததாக ஆசிரியர் ஒருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

45 வயது முகமட் கைருல்னிசாம் முஸ்லீன் என்ற அந்த ஆசிரியர் நீதிபதி டத்தின் சுரிதா பூடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

பள்ளியில் நல்லுரையாசிரியர் என்ற முறையில் செயல்பட வேண்டிய ஓர் ஆசிரியர், தகாத செயலில் ஈடுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆசிரியர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் சிரம்பானில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் 2007 ஆம் ஆண்டு சிறார் பாலியல் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS