புத்ராஜெயா, பிப்.7-
ஒரு தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹோங்கின் மூன்று பிள்ளைகளும் இஸ்லாம் மதத்திற்கே திரும்பித் தரப்பட வேண்டும் என்று பெர்லிஸ் மாநில அரசாங்கம் செய்து கொண்ட சீராய்வு மனு மீதான விசாரணை நடைபெறுவதற்கு கூட்டரசு நீதிமன்றம் ஏப்ரல் 4 ஆம் தேதியை வழக்கு விசாரணை நாளாக நிர்ணயித்துள்ளது.
விசாரணைக்கான புதிய தேதி நிர்ணயிக்கப்பட்டு இருப்பதை பெர்லிஸ் மாநில அரசாங்கம் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் டேனியல் பர்ஹான் சய்னுல் ரிஜால் உறுதிப்படுத்தியுள்ளார்.
வழக்கு விசாரணை தேதியை உறுதி செய்வதறகு வழக்கறிஞர் டேனியலும், லோ சியூ ஹோங்கின் வழக்கறிஞர் A. ஸ்ரீமுருகன் ஆகியோர் இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
லோ சியூ ஹோங்கின் மூன்று பிள்ளைகள், இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்டதை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் ரத்து செய்தது. அந்த மூன்று பிள்ளைகளும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று உறுதி செய்து இருந்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த முடிவை சீராய்வு செய்யுமாறு பெர்லிஸ் மாநில அரசாங்கமும், இதர மூன்று தரப்பினரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.