பெட்டாலிங் ஜெயா, பிப்.7-
முஸ்லிம் அல்லாதவர்களின் சமய நிகழ்ச்சிகள், பண்டிகைகள் மற்றும் நல்லடக்கச் சடங்குகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதற்கு முன்மொழியப்பட்ட புதிய வழிகாட்டல்கள் தொடர்பில் இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவான ஜாக்கிம், சமயத்தின் முக்கியத்துவத்தை முன்நிறுத்தி முஸ்லிம்களுக்கு ஆலோசனை கூறலாம். ஆனால், அந்த ஆலோசனைகள் அதிகாரப்பூர்வமான கொள்கையாக இராது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் முடிவு தொடர்பில் பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் மற்றும் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகா டகாங் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்தனர்.
இரண்டு தினங்களுக்கு முன்பு, இந்த புதிய வழிகாட்டல் குறித்து வெளியிட்டப்பட அறிக்கை பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சார்ந்த மலேசியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள முடிவை அவர்கள் அறிவித்தனர்.
இஸ்லாம் சமயத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் கருதி, ஜாக்கிம் ஆலோசனை கூறலாம். ஆனால், அது ஓர் அதிகாரப்பூர்வமான கொள்கை அல்ல என்பதை அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக இரு அமைச்சர்களும் கூட்டாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.