அந்த வழிகாட்டல் விதிமுறைகள் தேவையில்லை பத்துலை வருகையின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டம்

பத்துமலை, பிப்.7-

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இதர நிகழ்வுகளுக்குச் செல்லும் முஸ்லிம்களுக்கு வழிகாட்டுதல் விதிமுறைகள் தேவையில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக அறிவித்தார்.

முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் அல்லது நிகழ்வுகளுக்குச் செல்லும்போது மத வழிகாட்டுதல்கள் குறித்து ஏற்கனவே முஸ்லிம்கள் அறிந்து வைத்துள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். எனவே புதியதாக இந்த வழிகாட்டல் முறை தேவையில்லை என்று தாம் கருதுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா மற்றும் அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் தலைமையிலான கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அழைப்பை ஏற்று இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பத்துமலைத் திருத்தலத்திற்கு வருகை புரிந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தாார்.

ஒரு முஸ்லிம் என்ற முறையில் தற்போது பத்துமலைக்கு தாம் வருகை புரிந்து இருப்பது குகைகளைப் பார்வையிடவோ, அல்லது வழிபாட்டில் கலந்து கொள்ளவோ அல்ல. மாறாக பத்துமலையை பார்வையிட வந்துள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.

வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பதை பிரதமர் என்ற முறையில் பார்வையிடவே தாம் பத்துமலைக்கு வருகை தந்துள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.

எனவே முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தல நிகழ்வுகளுக்கு செல்ல, முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமான வழிகாட்டல் விதிமுறைகள் தேவையில்லை. ஏற்கனவே உள்ள வழிகாட்டல் முறைகள் போதுமானதாகும் என்று பிரதமர் விளக்கினார்.

முன்னதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் பத்துமலைத் திருத்தல வருகையையொட்டி தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் நடராஜா, பிரதமருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.

பிரதமரின் வருகையின் போது சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரன், மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு, பத்து எம்.பி. P. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பிரமருக்கு மகத்தான வரவேற்பை நல்கினர்.

WATCH OUR LATEST NEWS