கோலாலம்பூர், பிப்.7-
பாதுகாவலர் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட்டை சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தி, நம்பிக்கை மோசடி செய்ததாக அதன் இயக்குநர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
46 வயது U. யோகேஸ்வரன் என்று அந்த இயக்குநர் நீதிபதி ரோஸ்லி அகமட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
Asas Kukuh Securiti Service என்ற பாதுகாவலர் நிறுவனத்தின் இயக்குநரான யோகேஸ்வரன், நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 117 ரிங்கிட் 55 காசை பயன்படுத்தி, தனது வீட்டை புதுப்பித்தது, வீட்டுத் தவணைப் பணத்தைச் செலுத்தியது, கடனைத் திருப்பி செலுத்தியது என தனது சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு, தான் சார்ந்த நிறுவனத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
யோகேஸ்வரன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதிக்கும் மே 13 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 409 பிரிவின் கீழ் யோகேஸ்வரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.