கோலாலம்பூர், பிப்.8-
தைப்பூசத்தை முன்னிட்டு, இரண்டு பெரிய மின்னியல் திரையை பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்குத் தாம் வழங்கவிருப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ அறிவித்துள்ளார்.
இந்த மின்னியல் திரையின் வழி தைப்பூசத்திற்கு வரும் பக்தர்கள் தூரத்திலிருந்தே ஆலயத்தில் நடைபெறும் பூஜைகள் தொடர்பான காணொளிகளைக் கண்டுகளிக்கலாம்.
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், நல்லிணக்கத்தைக் கொண்டாடும் மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்தியர்களின் நலன் காக்கவும், அவர்களது நம்பிக்கைக்கு மதிப்பளிக்கவும் இலக்கவியல் அமைச்சு மேற்கொள்ளும் முயற்களில் இதுவும் ஒன்றாகும் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
அதோடு இந்திய சமுதாயம் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், மின்னியல் வணிகத்தில் ஈடுபட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. அதிவளர்ச்சி காணும் மின்னியல் பொருளாதாரம் இந்தியர்கள் பின் தங்விடக்கூடாது என இலக்கவியல் அமைச்சு கருதுகிறது.
நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பத்துமலை வருகையில், தாமும் இணைந்திருந்த போது பத்துமலையில், பெரும்பாலான சிறு குறு வணிகர்கள் இலக்கவியல் முறையில் தங்களது வணிகத்தை நடத்துவதை தாம் நேரடியாக காணும் வாய்ப்பு ஏற்பட்டதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
இந்த முயற்சி, உண்மையிலேயே பாராட்டுக்குரியது என்று அவர் புகழாரம் சூட்டினார்.
இந்திய சமூகத்தில் இந்த விழிப்புணர்வு தொடர வேண்டும், இன்னும் அதிகமான இந்திய வணிகர்கள் தங்களது வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ள இலக்கவியல் வணிகத்திற்கு மாறுவது சிறப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.