கோலாலம்பூர், பிப்.8-
அமெரிக்காவிற்கான மலேசியத் தூதராக கடந்த இரண்டு ஆண்டு காலமாக பதவி விகித்து வந்த முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அசிஸ், நாடு திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு, அவர் பதவி காலம் முடிவடைந்து விட்டது என்பது உண்மையான காரணம் அல்ல என்று DAP- யின் முன்னாள் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஒங் கியான் மிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டோனல்ட் டிரப்பிற்கும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் இடையில் நேரடியாக தொலைபேசி உரையாடலை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நஸ்ரி அப்துல் அசிஸ் தவறியதன் காரணமாக, அவரை நாடு திரும்பும்படி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்று ஒங் கியான் மிங் குறிப்பிட்டார்.
தமக்கு இரண்டு ஆண்டுகள் மட்டுமே தூதர் பணி ஒப்பந்த காலம் என்று நஸ்ரி கூறுவது உண்மை அல்ல. அமெரிக்கத் தூதராக அவருக்கு வழங்கப்பட்ட பதவிக் காலம் 6 ஆண்டு காலமாகும்.
மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தூதரக உறவை வலுப்படுத்த வேண்டிய தூதர் பணி ஏற்றுள்ள நஸ்ரி, இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையில் ஒரு முக்கியமான தொலைபேசி உரையாடலை ஏற்படுத்திக்கொடுக்க முடியாமல் போனதால் அவரை நாடு திரும்பும்படி அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது என்று ஒங் கியான் மிங் குற்றஞ்சாட்டினார்.