வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக பணம் பட்டுவாடா : 36 லட்சம் ரிங்கிட் பறிமுதல், 10 பேர் கைது

புத்ராஜெயா, பிப்.8-

வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக பணத்தை பட்டுவாடா செய்து வரும் கும்பல்களுக்கு எதிராக மலேசிய குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 லட்சம் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் Zakaria Shaaban தெரிவித்தார்.

இந்த சோதனை, சிலாங்கூர் கிள்ளான் மற்றும் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் ஆகிய பகுதிகளை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கியான பேங்க் நெகாரா மற்றும் Cyber Securiti ஆகியவற்றுடன் இணைந்து இந்த சோதனையை குடிநுழைவுத்துறை மேற்கொண்டது. சம்பந்தப்பட்ட வர்த்தகத் தளங்கள், நீண்ட காலமாகவே இத்தகைய சட்டவிரோத பண பட்டுவாடா நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருப்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

மலேசிய ரொக்கப்பணம் மட்டுமின்றி 1,400 Euro மற்றும் 10,000 Yuan போன்ற அந்நிய கரன்சிகளும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பிடிபட்ட மூன்று இந்தியப் பிரஜைகள் தங்களின் வேலை பெர்மிட்டை தவறாக பயன்படுத்தி, இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்களுடன் சேர்ந்து பிடிபட்ட மேலும் இரு இந்தியப் பிரஜைகள், கூடுதல் காலத்திற்கு மலேசியாவில் தங்கியுள்ளனர். மேலும் மூன்று இந்தியப் பிரஜைகள் மற்றும் ஓர் இந்தோனேசியப் பெண் ஆகியோருக்கு எந்தவொரு பயண ஆவணமும் இல்லை.

21 க்கும் 57 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த பத்து பேரும் தற்போது செமினி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக Zakaria Shaaban தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS