ஜோர்ஜ்டவுன், பிப்.8-
சுபாங்கிலிருந்து பினாங்கிற்கு புறப்பட்ட விமானத்தில் மற்றொரு பயணிக்கு சொந்தமான பொருட்களைத் திருட முயற்சித்தாக கூறப்படும் 52 வயது வெளிநாட்டுப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானத்தில் அடையாளம் தெரியாத பயணி ஒருவர், தனது கைப்பையைத் திறந்து சாமான்களை துழாவுவதை கவனித்து விட்ட அந்த கைப்பைக்கு சொந்தமான பயணி ஒருவர், பினாங்கில் தரையிறங்கியப் பின்னர் விமான நிலைய போலீசாரிடம் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த வெளிநாட்டுப் பயணி கைது செய்யப்பட்டதாக பாராட் டாயா மாவட்ட போலீசார் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தனர்.
முன்னதாக, இச்சம்வம் குறித்து அந்தப் பயணி , விமான சிப்பந்திகளிடம் புகார் செய்தார். பாயான் லெப்பாஸ் விமான நிலையத்தில் பயணிகள் அனைவரும் தரையிறங்கிய பின், அந்த வெளிநாட்டுப்பயணி அங்கேயே வளைத்துப் பிடிக்கப்பட்டார்.
விசாரணையின் போது, அந்த கைப்பையில் எந்தப் பொருளும் களவாடப்படவில்லை என்பது தெரியவந்தது. ஆனால், மேல் விசாரணைக்கான அந்த நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.