போர்ட்டிக்சன், பிப்.8-
நெகிரி செம்பிலான் மாநில அரசின் தொழில்முனைவோர், மனித வளம், பருவநிலைமாற்றம், மனித வளம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகாரத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் தலைமையில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் முகிம் ஜிமா, போர்ட்டிக்சன், பண்டார் ஸ்பிரிங்ஹில் என்ற இடத்தில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் மிகப்பெரிய சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சீன நாட்டு நிறுவனம் ஒன்றின் தலைமையில் சில துணை குத்தகை நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுவதாக கூறப்படும் அந்த கட்டுமானத் தளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், அவர்களுக்கான தங்கும் இடம் உட்பட பல்வேறு விவகாரங்களை முன்நிறுத்தி இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நெகிரி செம்பிலான் ஆள்பல இலாகா, அரச மலேசிய போலீஸ் படை, குடிநுழைவு இலாகா, போர்ட்டிசன் நகராண்மைக்கழகம் ஆகியவை சம்பந்தப்பட்ட, இந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் தலைமையேற்றார்.
China State Construction Engineering மலேசியா சென்டிரியான் பெர்ஹாட் என்ற அந்த கட்டுமான நிறுவனத்தில் சுமார் 400 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிறுவனம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்பட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று வீரப்பன் தெரிவித்தார்.

அந்த தொழிலாளர்களின் நிலை மற்றும் அவர்களின் குடியிருப்பு தொடர்பில் ஆராயப்பட்டதில் 108 பேருக்கு எந்தவொரு பயண ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது.
14 இந்தியப்பிரஜைகள், 3 பாகிஸ்தானியர்கள், 2 மியன்மார் பிரஜைகள், 74 வங்காளதேசிகள், 15 சீனப் பிரஜைகள் என 108 பேரையும் குடிநுழைவு இலாகாவினர் கைது செய்தனர். எஞ்சிய தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாக வீரப்பன் குறிப்பிட்டார்.
அந்த 400 தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புகளும் நெகிரி செம்பிலான் ஆள்பல இலாகா நிர்ணயித்துள்ள நிபந்தனையை பூர்த்தி செய்வதாக இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக வீரப்பன் தெரிவித்தார்.