பெட்டாலிங் ஜெயா, பிப்.8-
PLKN 3.0 எனப்படும் தேசிய சேவை பயிற்சித் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்களுக்கு அந்த சேவை கட்டாயமாகும். தேசிய சேவையில் தாங்கள் கலந்து கொள்ள இயலாது என்றும், அப்பயிற்சியில் தாங்கள் கலந்து கொள்வதை ஒத்திவைக்குமாறும் ஏற்புடைய காரணங்களை முன்வைக்கின்றவர்களை தவிர மற்றவர்கள் யாருக்கும் இப்பயிற்சியிலிருந்து விலக்களிப்பு வழங்கப்படாது என்று தேசிய சேவை பயிற்சித் திட்டத்தின் தலைமை இயக்குநர் யாகோப் சமிரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வேலை செய்யும் நபர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்வதற்கு முதலாளிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை விடுவிக்க முதலாளிமார்கள் மறுத்தால் அதற்கான காரணத்தை அவர்கள் விளக்கியாக வேண்டும்.
முதலாளிமார்களின் விளக்கம், திருப்தி அளிக்கவில்லை என்றால் மாற்று நடவடிக்கைகளை கையாளுவோம் என்று யாகோப் சமிரான் தெரிவித்தார்.