சொஸ்மா தடுப்புக் கைதிகளின் 32 குடும்பத்தினர், சுங்கை பூலோ சிறைச்சாலையின் முன் உண்ணாவிரதப் போராட்டம்

சுங்கை பூலோ, பிப்.8-

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான SOSMA-வின் கீழ் நீதிமன்ற விசாரணையின்றி தடுப்புக்காவலில் வைத்திருக்கும் 32 சொஸ்மா கைதிகளின் குடும்பத்தினர், இன்று சனிக்கிழமை காலையில் சுங்கை பூலோ சிறைச்சாலையின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

சுங்கை பூலோ சிறைச்சாலைக்குள் 32 சொஸ்மா கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், தங்கள் குடும்ப உறுப்பினர்களை பார்க்கவும், அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அரசாங்கமும், சிறைச் சாலை இலாகாவும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட தடுப்புக் கைதிகளை வார இறுதியில் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிடும் நிகழ்வை சிறைச்சாலை இலாகா, திடீரென்று ரத்து செய்துள்ளது. இது குறித்து அறிய இன்று காலையில் சிறைச்சாலைக்கு சென்று, அதிகாரி ஒருவரை விசாரித்த போது, சொஸ்மா கைதிகள், உண்ணா விரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் என்று கூறியதாக சுங்கை பூலோ சிறைச்சாலையில் 32 தடுப்புக் கைதிகளில் ஒருவரின் சகோதரரான 49 வயது எம். லோகேஸ்வரன் தெரிவித்தார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் சிலரை அனுமதிக்கும்படியும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் தாங்கள் முன் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதாக லோகேஸ்வரன் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக 32 தடுப்புக் கைதிகளின் குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்ததில் சிறைச்சாலையின் முன்புறம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதென தாங்கள் முடிவு செய்துள்ளதாக லோகேஸ்வரன் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் சம்பந்தப்பட்டவர்களைப் பார்ப்பதற்கு உள்துறை அமைச்சும், சிறைச்சாலை இலாகாவும் அனுமதிக்கும் வரையில் தங்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரப் போவதாக லோகேஸ்வரன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS