பட்டர்வொர்த், பிப்.8-
பினாங்கு, பாகான் தொகுதி மக்களுக்கு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நன்னாளாகும் என்று செனட்டர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில், பட்டர்வொர்த் சுகாதார கிளினிக், 2 ஆவது வகை கிளினிக்காக மட்டுமே வகைப்படுத்தப்பட்டு இருந்தது.
ஆனால், பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்கின் கடின முயற்சி மற்றும் உழைப்பின் காரணமாக அவர் வழங்கிய வலுவான ஆதாரங்களின் விளைவாக, பட்டர்வொர்த் சுகாதார கிளினிக்கை 120 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கிட்டில் முதல் வகை கிளினிக்காக மேம்படுத்துதற்கு சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் ஒப்புக்கொண்டுள்ளார் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று பினாங்கு, பட்டர்வொர்த்திற்கு வருகை புரிந்த அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட், இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருப்பது மூலம் பாகான் வாழ் மக்களுக்கு சுகாதார கவனிப்பில் நம்பிக்கை ஒளி பிறந்துள்ளது என்று டாக்டர் லிங்கேஸ்வரன் வர்ணித்தார்.
முதல் வகை கிளினிக்காக பட்டர்வொர்த் கிளினிக்கை மேம்படுத்துவது மூலம் நவீன மற்றும் முழுமையான சுகாதார வசதிகளை இந்த கிளினிக் கொண்டு இருக்கும்.
முதல் வகை கிளினிக்கில் எப்போதும் சிறப்பு சிகிச்சை பிரிவு மற்றும் மேம்பட்ட மருத்துவ உபகரணங்கள் உட்பட மிகவும் விரிவான அளவில் சேவைகளை வழங்கப்படும். இதன் மூலம் பட்டர்வொர்த் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரப் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்தும் என்று டாக்டர் லிங்கேவரன் குறிப்பிட்டார்.
இதில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்னவென்றால் கோலாலம்பூருக்குப் பிறகு மலேசியாவில் இரண்டாவது, முதல் வகையைச் சேர்ந்த கிளினிக் பட்டர்வொர்த்தில் அமைகிறது. பினாங்கு மாநிலத்தில் இது முதலாவது கிளினிக்காகும்.
மக்களின் நல்வாழ்வுக்காகப் போராடிய லிம் குவான் எங்-க்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில் பாகான் தெகுதி மக்கள் மீது அதிக அக்கறை செலுத்தியுள்ள சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட்டிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.