பெட்டாலிங் ஜெயா, பிப்.8-
அமெரிக்காவில் மலேசியத் தூதராக பணியாற்றுவதற்கு தமக்கு தகுதி இல்லை என்று டிஏபியின் முன்னாள் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கான மலேசியத் தூதராக முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஸிஸ், தமது பதவியைத் தற்காத்துக் கொள்ளத் தவறிவிட்டார் என்று அவரை ஓங் கியான் மிங் கடுமையாகக் குறை கூறியிருந்தார்.
எனினும் அமெரிக்காவிற்கான தூதர் பதவியை எதிர்பார்த்துதான் ஓங் கியான் மிங், தம்மை குறை கூறியுள்ளார் என்று நஸ்ரி சாடியிருந்தார்.
நஸ்ரிக்கு பதிலடி கொடுத்த ஓங் கியான் மிங், அந்த அம்னோ முன்னாள் தலைவரை விட தம்மால் சிறப்பாக பணியாற்ற முடியும் என்பதைத் தெளிவுபடுத்தினார்.
அமெரிக்காவிற்கான மலேசியத் தூதர் என்ற முறையில் நஸ்ரி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் இடையில் நேரடியாக தொலைபேசி உரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்யத் தவறிவிட்டார் என்பதற்காக அவரின் பதவியை அரசாங்கம் மீட்டுக்கொண்டு விட்டதாக ஓங் கியான் மிங் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
நஸ்ரிக்கு வழங்கப்பட்ட 6 ஆண்டு கால தூதர் பதவியை , இரண்டே ஆண்டுகளில் அரசாங்கம் மீட்டுக் கொண்டு, இன்று பிப்ரவரி 8 ஆம் தேதியுடன் அவரின் பதவி ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக ஓங் கியான் மிங் குற்றஞ்சாட்டினார்.