கிள்ளான், பிப்.8-
முஸ்லிம் அல்லாதவர்களின் கொண்டாட்டங்களில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதற்கு வழிகாட்டல்களை உருவாக்குவதில் தமக்கு உடன்பாடுயில்லை என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் இட்ரிஸ் ஷா இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
குறிப்பாக, சிலாங்கூர் மாநிலத்தில் இது போன்ற வழிகாட்டல்களுக்கு தமக்கு உடன்பாடுயில்லை என்று சுல்தான் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக பல்லின மக்களிடையே, பல்வேறு சமயத்தவர்களிடையே அணுக்கமான நல்லிணக்கத்தை விதைப்பதற்கு மக்கள் மத்தியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முஸ்லிம்களுக்கு இது போன்ற வழிகாட்டல் முறையை உருவாக்குவதற்கு, இது பொருத்தமான நேரம் அல்ல என்ற சிலாங்கூர் சுல்தான் தெளிவுபடுத்தினார்.
இவ்விவகாரத்தினால் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது. சமூகத்தில் சிறிது பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது, ஏற்கனவே மக்களிடையே கட்டிக்காக்கப்பட்டு வரும் நல்லிணக்கத்தை நிச்சயமாகப் பாதிக்கும் என்று சிலாங்கூர் மாநில சமயத் தலைவரான சுல்தான் இட்ரிஸ் ஷா கூறியதாக இஸ்தானா ஆலாம் ஷா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது போன்ற வழிகாட்டல் முறைகளை நிராகரிக்கும் அதே வேளையில் மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று சுல்தான் கோரிக்கை விடுத்துள்ளார்.