பெட்டாலிங் ஜெயா, பிப்.9-
கடந்த ஆண்டுக்கான ஊழியர் சேமநிதி வாரியத்தின் சேமிப்புக்கான ஈவுத் தொகை 5.8 விழுக்காடாகவும், ஷரியா சேமிப்பிற்கு 5.4 விழுக்காடு முதல் 5.6 விழுக்காடாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2023 ஆம் ஆண்டைக் காட்டிலும் சற்று அதிகம். 2023 இல் சேமிப்பிற்கு 50.33 பில்லியன் ரிங்கிட்டும், ஷரியா சேமிப்பிற்கு 7.48 பில்லியன் ரிங்கிட்டும் ஈவுத்தொகையாக வழங்கப்பட்டது. ஊழியர் சேமநிதி வாரியத்தில் சுமார் 16 மில்லியன் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 8.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பங்களித்து வருகின்றனர்.
KWSP அதன் முதலீடுகளை விற்றுப் பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் ஈவுத்தொகையை வழங்குகிறது. மொத்த வருமானத்தின் அடிப்படையில் ஈவுத்தொகையை ஊழியர் சேமநிதி வாரியம் நிர்ணயிப்பதில்லை. சிங்கப்பூரின் ஊழியர் சேமிப்பு நிதியம் இதேபோன்ற அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. அதன் சராசரி ஈவுத்தொகை 10 ஆண்டுகளில் 4 விழுக்காடு ஆகும். ஊழியர் சேமநிதி வாரியத்திஇன் கவனமான அணுகுமுறை காரணமாக, உறுப்பினர்கள் அதிக ஈவுத்தொகையை எதிர்பார்க்கக்கூடாது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.