ஈப்போ, பிப்.9-
பேரா தண்ணீர் வாரியமான LEMBAGA AIR PERAKக்கின் பெரிய நீர் குழாய்க்கு மேல் 10 மீட்டருக்கும் அதிகமாக மண் அரிப்பு நேர்ந்ததால் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால் தாமான் பூங்கா ராயாவில் உள்ள மூன்று வீடுகள் விரிசல் ஏற்பட்டு, வசிக்க முடியாத நிலையில் உள்ளன. பத்து 7, சுங்கை வோவிலும் சுங்கை பாதாங் பாடாங்கிலும் உள்ள பத்து 10 நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 825 மில்லி மீட்டர் அளவுள்ள குழாயும் 900 மில்லி மீட்டர் அளவுள்ள குழாயும் புகிட் தெமோ நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்குகின்றன. அதே சமயம், பாதாங் பாடாங், ஹிலீர் பேராக் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கும் நீர் வழங்குகிறது. தாப்பா ரோட், சங்காட் பெத்தாய், தஞ்சோங் கிராமாட், ஆயிர் கூனிங், சுங்கை குரோ ஆகிய பகுதிகளோடு அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள் பத்தாங் பாடாங் மாவட்டத்தில் நீர் விநியோக இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹிலிர் பேரா மாவட்டத்தில், முகிம் லாபு குபோங், முகிம் சுங்கை மானிக், லங்காப், சுய் சாக் இவைகளைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 6 ஆம் தேதி, கசிவுள்ள குழாயைக் கண்டுபிடித்து பழுதுபார்க்கும் பணிகளைச் செய்வதற்காக LAP நீர் விநியோக இடையூறு அறிவிப்பை வெளியிட்டது. இருப்பினும், 10 மீட்டருக்கும் அதிகமான ஆழமான அகழ்வுப் பணிகளால் மண் அரிப்பு ஏற்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டன. கசிவுக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. புகிட் தெமோ நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு அதன் உண்மையான விநியோகிப்பில் இருந்து 50 விழுக்காடாகக் குறைந்துள்ளது என LAP குறிப்பிட்டுள்ளது.