பெனாம்பாங், பிப்.9-
மலேசியாவில் உள்ள வணிக வளாகங்களும் பல்பொருள் அங்காடிகளும் மைகாட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி குறிப்பிடுகையில், SARA எனப்படும் ரஹ்மா அடிப்படை உதவித்தொகைத் திட்டத்தின் பலன்களை மக்கள் தங்கள் மைகாட்களில் எளிதாகப் பெற இஃது உதவும் என்று கூறினார். SARA திட்டம் இந்த ஆண்டு முதல் சபா, சரவாக்கில் மைகாட் மூலம் நீட்டிக்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்திருந்ததை அவர் சுட்டிக் காட்டினார். .
சபா , சரவாக்கில் முன்பு ரொக்கமாக வழங்கப்பட்ட உதவித்தொகை பயனர்களைச் சென்றடைய பல மாதங்கள் ஆனது. ஆனால் இந்த ஆண்டு முதல், சபா , சரவாக்கில் உள்ள பல்பொருள் அங்காடிகளிலும் பிற வணிக வளாகங்களிலும் மைகாட் மூலம் பணம் செலுத்தலாம். பயனர்கள் பல்பொருள் அங்காடிகளுக்குச் சென்று தங்கள் மைகாட்டிக் கொண்டு பணம் செலுத்தலாம், உதவித்தொகையின் இருப்பையும் சரிபார்க்கலாம். அரசாங்கம் 2025 ஆம் ஆண்டில் STR எனப்படும் ரஹ்மா ரொக்க உதவிக்காகவும் SARA திட்டங்களுக்காகவும் கிட்டத்தட்ட 13 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது. இது மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைச் சமாளிக்க உதவும் முயற்சியாகும்.