மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேலும் 18 பேரை அடையாளம் கண்டுள்ளது

ஷா ஆலாம், பிப்.9-

நிதி ஆலோசனை நிறுவனத்தில் ஊழல், பணமோசடி வழக்கு தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேலும் 18 பேரை அடையாளம் கண்டுள்ளது. இதுவரை 39 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. வங்கிக் கடன் விண்ணப்பங்களை எளிதாக்கி, அங்கீகரித்த வங்கி நிறுவன அதிகாரிகளின் ஊழல் புகார் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணையை முடிக்க அதிக நேரம் தேவை என்று அதன் தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார். அடையாளம் காணப்பட்ட வாடிக்கையாளர்கள் எடுத்த கடன்கள் தொடர்பான ஆவணங்களைப் பெற சில வங்கிகளுடன் SPRM இணைந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த வியாழக்கிழமை, நிதி ஆலோசனை நிறுவனத்துடன் தொடர்புடைய மூன்று பிரபலங்களிடம் SPRM வாக்குமூலம் பெற்றது. அவர்கள் விளம்பர நோக்கங்களுக்காக பிராண்ட் தூதர்களாக ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளில் 4 இலட்சம் ரிங்கிட் வரை பணம் பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மாதம், SPRMமின் பணமோசடி தடுப்புப் பிரிவு, Bank Negara உடன் இணைந்து கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள வீடுகள், அலுவலகங்கள் உட்பட 24 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி 12 பேரை கைது செய்தது. இதுவரை, வங்கி அதிகாரிகள், கடன் மோசடி சிண்டிகேட்டில் ஈடுபட்ட நிதி ஆலோசனை நிறுவன ஊழியர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் SPRM ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில், SPRM சுமார் 4,000 ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளதுடன், 17 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான 98 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS