கூலிம், பிப்.9-
முதியோருக்கான தேசிய influenza தடுப்பூசித் திட்டத்தை பிப்ரவரி 18 முதல் சுகாதார அமைச்சு தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் பேர் தடுப்பூசி பெறவுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் பிப்ரவரி 14 முதல் MySejahtera செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். 60 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளினிக்குகளில் இந்தத் தடுப்பூசியைப் பெறலாம். தனியார் துறையும் மாநில அரசும் இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்பட ஊக்குவிக்கப்படுகின்றன என சுகாதார துணை அமைச்சர் லுகானிஸ்மான் அவாங் சௌனி கூறினார்.
சுகாதார அமைச்சு நாடு முழுவதும் உள்ள பழுதடைந்த கிளினிக்குகளை மேம்படுத்தி வருகிறது. 455 மேம்பாட்டுத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் 41 கெடாவில் மேற்கொள்ளப்படுகின்றன. 2025 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட கூலிம் மருத்துவமனையை மேம்படுத்தும் திட்டம் தொடர்பாக, மருத்துவமனையின் தேவைகளையும் விவரக் குறிப்புகளையும் கண்டறியத் தொடக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.