கோலாலம்பூர், பிப்.10-
நபர் ஒருவரை ஏமாற்றி 51 லட்சம் ரிங்கிட்டை மோசடி செய்ததாக நிறுவன இயக்குநர் ஒருவர்,கோலாலம்பூர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
60 வயது ஆர். கோபிநாதன்பிள்ளை என்ற அந்த இயக்குநர், Hartalega – Branded Nitrile பரிசோதனை கையுறைகளை உள்ளடக்கிய ஒரு லட்சத்து 50 ஆ யிரம் பெட்டிகள் Hartalega Sdn. Berhad நிறுவனத்தில் விற்பனையில் இருப்பதாகவும், அவற்றை தனது நிறுவனமான Aspen Broadway Sdn. Bhd. நிறுவனம் வாங்க வேண்டும் என்றும், கூறி, ஒருவரை நம்பவைத்து 51 லட்சம் ரிங்கிட்டை பெற்று மோசடி புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
கோபிநாதன் பிள்ளை, இக்குற்றத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி கோலாலம்பூர் Jalan Tun Ismail-லில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்கமாடி வீட்டில் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
உண்மையிலேயே அப்படியொரு கையுறை விற்பனையில் இல்லை என்று நன்கு தெரிந்திருந்தும் சம்பபந்தப்பட்ட நபரை கோபிநாதன் பிள்ளை ஏமாற்றியுள்ளார் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் குற்றத்தை மறுத்து கோபிநாதன் பிள்ளை விசாரணை கோரியிருப்பதால் அவரை இரு நபர்களின் உத்தரவாதத்தின் பேரில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிபதி Hamidah Deril உத்தரவிட்டார்.