மூன்று தினங்களுக்கு கொண்டாடப்படவிருக்கும் சுங்கைபட்டாணி தைப்பூச விழாவையொட்டி, ஜாலான் ஹாஸ்பிட்டல், ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்திலிருந்து பக்தர்கள் ரதக்காவடிகளை மற்றம் காவடிகளை ஏந்திக்கொண்டு, ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலை நோக்கி புறப்பட தயாராகிக்கொண்டு இருக்கின்றனர்.
இரவு 8 மணியளவில் தொடங்கிய காவடிகள் புறப்பாடு அதிகாலை வரையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்திற்கு சொந்தமான மகா முனீஸ்வரர் ஆலயத்திலிருந்து காவடிகள் ஏந்திய வண்ணம், சுமார் 20 நிமிட பயணத்தில் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலை சென்றடைந்து, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவது நெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக ஆலயத் தலைவர் செல்வம் விவரித்தார்.
தைப்பூசத்தையொட்டி மகா முனீஸ்வரர் ஆலயத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வை கடந்த ஐந்து ஆண்டு காலமாக நடத்தி வருவதாக ஒரு சீனப்பக்தரான Michael Saw தெரிவித்தார்.
இதேபோன்று தைப்பூசத்தையொட்டி கடந்த ஒன்பது ஆண்டுகளாக தண்ணீர் பந்தல் நிறுவி பக்தர்களின் தாகத்தை தணித்து வருவதாக அஜேய் விஜயன், ஷஷினிகாந்த் மற்றும் சுரேஸ் தேவன் தெரிவித்தனர்.
ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலிருந்து ஆயிரம் பால்குடங்கள், 60 பெரிய காவடிகள், 30 சிறியக் காவடிகள், 60 அலகுகாவடிகள், ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலை நோக்கி புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.