ஜார்ஜ்டவுன், பிப்.11-
வரலாற்று சிறப்புமிக்க பினாங்கு, தண்ணீர் மலை, அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு இயந்திர மின் தூக்கி வசதி பொருத்தும் திட்டத்தை மாநில முதலமைச்சர் Chow Kon Yeow இன்று அறிவித்தார்.
அடிவாரத்திலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு வழிபட வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் குறிப்பாக, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், நடக்க முடியாதவர்கள், கர்ப்பிணிகள், மேல் கோவிலுக்கு சென்று வருவதற்கு ஏதுவாக இந்த இயந்திர மின் தூக்கித் திட்டம் நிர்மாணிக்கப்படும் என்று Chow Kon Yeow குறிப்பிட்டார்.
தைப்பூசத்தையொட்டி இன்று மாலை 5 மணியளவில் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்பு நிகழ்விற்கு வருகை புரிந்த Chow Kon Yeow, தமது உரையில் இதனை தெரிவித்தார்.
பினாங்கு, Bukit Bendera கொடிமலையில் கேபல் கார் திட்டத்தை மேற்கொள்வதற்கு மாநில அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள Hartasuma Sdn. Bhd. நிறுவனம், வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலுக்கு இயந்திர மின்தூக்கி அல்லது People Mover System முறையை மேம்படுத்துவதற்கு ஆர்வப்பட்டு, உத்தேச பரிந்துரையை முன்வைத்துள்ளதாக Chow Kon Yeow குறிப்பிட்டார்.
கோவில் வீற்றிருக்கும் இந்த மலைமீது எத்தகைய போக்குவரத்து அல்லது மின் தூக்கி வசதி மிக பொருத்தமாக இருக்கும் என்பது குறித்து ஆய்வு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் Hartasuma நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிர்மாணிப்புத் திட்டம், நிறைவுப்பெற்ற பின்னர் இத்திட்டத்தை வழிநடத்தவும், பராமரிக்கவும் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.
இத்திட்டத்திற்கான ஆய்வுப்பணிகளுக்கு, 6 மாத காலம் ஆகலாம். நிர்மாணிப்பு பணிகளுக்கு 24 மாத காலம் ஆகலாம்.
இத்திட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் அதிகமானோர் ஆலயத்திற்கு வருகை புரியும் நிலை ஏறப்டலாம் என்று முதலமைச்சர் Chow Kon Yeoh குறிப்பிட்டார்.
அதேவேளையில் ஆலயத்தை திறம்பட வழிநடத்தி வரும் டத்தோஸ்ரீ கே. குமரேந்திரன் தலைமையிலான ஆலய நிர்வாகத்தை முதலமைச்சர் தமது உரையில் வெகுவாக பாராட்டினார்.