ஜார்ஜ்டவுன், பிப்.11-
மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தை ஆதரித்து உதவுவதில் இலக்கவியல் அமைச்சு உறுதியாக இருப்பதாக அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு இலக்கவியல் அமைச்சு நாடு முழுவதும் உள்ள கோயில்கள், இந்திய அமைப்புகள் மற்றும் தமிழ்ப் பள்ளிகளுக்கு 2 மில்லியன் ரிங்கிட் நிதி உதவியை வழங்கியிருப்பதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
மலேசியர்களின் பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுவதற்காக மடானி அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டிற்கு இணங்க, மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்திற்கு உதவுவதில் இலக்கவியல் அமைச்சு மேற்கொண்டு வரும் முன்னெடுப்புகளில் இதுவும் ஒன்றாகும் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
பினாங்கு, தைப்பூச கொண்டாட்டத்தையொட்டி, தண்ணீர் மலை, ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவிலில் இன்று மாலையில் முதலமைச்சர் Chow Kon Yeow வருகையையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் கோபிந்த சிங் இதனை தெரிவித்தார்.
இலக்கவியல் வளர்ச்சி அதன் மேம்பாட்டில் எந்த வொரு சமூகமும் புறந்தள்ளப்படாது என்பதை அமைச்சர் கோபிந்த சிங் தமது உரையில் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்திற்கான இந்த உதவிகள் இந்த 2025 ஆம் ஆண்டும் தொடரும் என்பதை அறிவிப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு தைப்பூசத்திற்காக, இலக்கவியல் அமைச்சு, பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் இரண்டு பிரமாண்டமான டிஜிட்டல் திரைகளை அமைத்துள்ளது. தைப்பூச கொண்டாட்டத்தின் நிகழ்வுகளை மிக அருகில், நெருக்கமாக கண்டு களிப்பற்கு வசதியாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
எல்லா துறைகளிலும் இலக்கவியல் துறையின் அவசியத்தையும், அதன் தாக்கத்தையும் விளக்கி கூறிய கோபிந்த சிங், இந்த நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் எப்போதும் பாதுகாத்து வர வேண்டிய அவசியத்தையும் தமது உரையில் வலியுறுத்தினார்.