பத்துமலை, பிப்.11-
தைப்பூச விழாவின் போது, கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலிருந்து பத்துமலையை நோக்கி புறப்படும் வெள்ளி இரதம் அடுத்த ஆண்டு முதல் இரவு 7 மணிக்கு புறப்படுவதற்கான திட்டத்தை அமல்படுத்தக்கூடும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் புறப்பட்ட வெள்ளி இரதம், நேற்று மாலை 7 மணிக்கு பத்துமலை திருத்தலத்தை வந்தடைந்தது. சுமார் 22 மணி நேரம் வெள்ளி இரதத்தின் பயணம் அமைந்தது.
வெள்ளி இரதம் பயணத்திற்கு கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளப்படுவதை தவிர்க்கவும், பத்துமலைத் திருத்தலத்தில் இதர வைபவங்கள் குறித்த நேரத்தில் நடைபெறுவதை உறுதி செய்யவும் அடுத்த ஆண்டு முதல் இரவு 7 மணிக்கு தாய்க்கோவிலிருந்து புறப்படுவதற்கான யோசனையை தேவஸ்தானம் கொண்டுள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.