பத்துமலை தைப்பூச விழாவையொட்டி கடந்த 11 நாட்களில் 18 லட்சம் பேர் திரண்டனர்

பத்துமலை, பிப்.11-

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் உற்சவ நன்னாளான தைப்பூச விழா, பத்துமலைத் திருத்தலத்தில் இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு பத்துமலைத்திருத்தலத்தில் திண்ட பெரும் மக்கள் வெள்ளம் இதுவே என்று சொல்லும் அளவிற்கு இன்று தைப்பூச விழாவில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் உட்பட அதிகமான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

முருகப்பெருமான் காலை 7 மணியளவில் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்து, நதிக்கரையில் பக்தர்களுக்கு தீர்த்தோற்சவக் காட்சி தந்த பின்னர் தங்கவேல் புறப்பட்டு மேற்குகை ஸ்ரீ வேலாயுதர் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் பூச நட்சத்திரத்தில் தைப்பூச விழா தொடங்கியது.

இன்று தைப்பூச நன்னாள் என்ற போதிலும், பக்தர்கள் கடந்த பிப்ரவரி முதல் தேதியிலிருந்து பால் குடங்கள், காவடிகள் ஏந்திய வண்ணம் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருவதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் தெரிவித்தார்.

கடந்த 11 நாட்களில் கிட்டத்தட்ட 18 லட்சம் பேர் பத்துமலைத்திருத்தலத்திற்கு வருகை புரிந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார். தைப்பூச விழா சுமூகமாகமாகவும் சிறப்பாகவும் நடைபெறுவதற்கு போலீசாரின் பெரும் ஒத்துழைப்பு மற்றும் 1,400 மருத்துவ அதிகாரிகள் உட்பட தேவஸ்தானம் மூவாயிரம் தொண்டர்களை சேவைக்கு அமர்த்தியிருப்பதாக சிவகுமார் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டை விட இம்முறை மக்கள் கூட்டம், 20 விழுக்காடு அதிகமாகும். தைப்பூச விழாவை சிறக்க செய்வதற்கு பக்தர்கள் நேற்று காலை முதல் மாலை வரையில் பக்தர்கள் செவ்வனே தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருவதாக சிவகுமார் குறிப்பிட்டார்.

தைப்பூசம், இந்துக்களின் சமய விழாவாக இருந்த போதிலும் விழாவை மெருகூட்டுவதற்கு சுமார் 350 தைப்பூசக் கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதையும் சிவகுமார் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS