ஜார்ஜ்டவுன், பிப்.12-
பினாங்கில் உள்ள இந்துக்களுக்கு நேற்று ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த நன்னாளாகும். பினாங்கு, அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில் மலை உச்சியில் முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான மின்தூக்கி கட்டுமானத் திட்ட அறிவிப்பை நேற்று கொண்டாடப்பட்ட தைப்பூச விழாவில் முதலமைச்சர் Chow Kon Yeow அறிவித்து இருப்பது, உண்மையிலேயே பெருமிதத்தை அளிப்பதாக உள்ளது என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த மின் தூக்கித் திட்டத்தின் சாத்தியக் கூறு, ஆய்வுக்கான விருப்பக் கடிதத்தைச் தொழில் அதிபர் டான்ஸ்ரீ ரவி மேனன், மாநில அரசிடம் சமர்ப்பித்து இருப்பது, அவரின் ஈடுபாட்டை, பினாங்கு இந்து அறவாரியத்தின் துணைத் தலைவர் என்ற முறையில் தாம் வெகுவாக பாராட்டுவதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.
இந்த மின் தூக்கித் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பினாங்கு மாநில அரசு காட்டும் விருப்பம் மற்றும் ஆர்வம், இந்துக்களின் நல்வாழ்வுக்கான அதன் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது, குறிப்பாக, இந்த மின் தூக்கி வசதி தேவைப்படுகின்ற மக்களுக்கு பினாங்கு அரசு கொண்டுள்ள சிரத்தை காட்டுகிறது.
இத்திட்டம் தொடர்பில் டான்ஸ்ரீ ரவி மேனனுடனான கலந்துரையாடல்களில் முக்கிய பங்கு வகித்ததற்காக பினாங்கின் முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் மற்றும் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவில் நிர்வாகத் தலைவர் டத்தோஸ்ரீ குமரேந்திரன் ஆகியோருக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், அவர்களின் முயற்சிகள் இல்லாமல் இந்த திட்டம் சாத்தியமில்லை என்று டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.
பினாங்கு, இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக RSN ராயர் பொறுப்பேற்ற 15 மாதங்களில் அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு நல்லதொரு பலன் கிடைத்துள்ளது.
ராயருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில் 2025 ஆம் ஆண்டு பினாங்கு தைப்பூச விழா, மாநில இந்துக்களுக்கு ஒரு வரலாற்று சாதனையாகும். இத்தருணத்தில் அனைத்து தரப்பினக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் லிங்கேஸ்வரன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.