சுபாங் ஜெயா, பிப்.12-
பானங்கள் குடிக்கும்போது பயன்படுத்தப்படும் ஸ்ட்ரா எனப்படும் உறிஞ்சு குழாயை விவகாரத்தில், அமெரிக்கா வேறு அணுகுமுறையைப் பின்பற்றி வந்தாலும், மலேசியா அதன் பயன்பாட்டை முழுமையாக நிறுத்துவதையே கொள்கையாக கொண்டுள்ளது எனவும் அதில் இருந்து மாறப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார் இயற்கை வளங்கள் , சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மத்.
இவ்விவகாரம் குறித்து அவர் பேசுகையில், பயனீட்டாளர் மத்தியில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்களுக்கான அவசியம் இல்லை என்று தமது தரப்பு கருதுவதாகவும் ஏனெனில் இதற்கு மாற்றுவழிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காகிதத்தால் ஆன உறிஞ்சு குழாய்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கக் கேட்டபோது நிக் நஸ்மி இவ்வாறு கூறினார்
நாடு ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை சுழியத்தை நோக்கிச் சென்றாலும், சில துறைகள் உள்ளன என்பதை தமது தரப்பு அறிவதாகக் கூறிய அவர், மருத்துவத் துறையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டி பொருட்கள் இன்னும் நடப்பில் இருக்கும் தேவையைச் சுட்டிக் காட்டினார்.
அந்த அடிப்படையில், நிலையான முறையில் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதுடன் மறுசுழற்சி அணுகுமுறையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.