மலேசியாவின் தேசிய சம்பள ஆலோசனை மன்றத்தின் துணைத் தலைவராக ராஜேஸ்வரி கருப்பையா நியமனம்

புத்ராஜெயா, பிப்.13-

மலேசிய தொழிலாளர்களின் சம்பள நிர்ணயிப்பில் முக்கிய பங்காற்றி வரும் தேசிய சம்பள ஆலோசனை மன்றத்தின் துணைத் தலைவராக திருமதி ராஜேஸ்வரி கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேசிய தொழிலியல் நீதிமன்றத்தின் முன்னாள் தலைவரான ராஜேஸ்வரி, தேசிய சம்பள ஆலோசனை மன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கான கடிதத்தை, மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் வழங்கினார்.

தொழிலில் மன்றத்தின் தலைவராக 32 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, தொழிலியல் சட்ட சிக்கல்களை நன்கு அறிந்து, சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவரான ராஜேஸ்வரி, தேசிய சம்பள ஆலோசனை மன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டது மூலம் முக்கிய பங்களிப்பை வழங்குவார் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் நம்பிக்கை தெரிவித்தார்.

திருமதி ராஜேஸ்வரி, லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் LLB Hons பட்டத்தை கொண்டுள்ளார். தொழில்துறை சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் MCAIRB நடுவர் மன்றத்தின் உறுப்பினராகவும் ராஜேஸ்வரி பெரும் பங்களிப்பாற்றியுளளார்.

அமெரிக்கா, வாஷிங்டனில், உலக வங்கியில் சட்டத்துறையில் ஆலோசகராகவும், மலேசியத் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பள நிர்ணயம் உட்பட மலேசிய தொழிலாளர் கொள்கை மீதான சட்டம் வகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள ராஜேஸ்வரி, மலேசியாவில் தொழிலியல் நீதிமன்றத் தலைவராக பணியாற்றிய காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட KPI அடைவு நிலையை விட கூடுதலாக உச்ச அடைவு நிலையைப் பெற்று சீரிய முறையில் பங்காற்றியவர் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் புகழாரம் சூட்டினார்.

இதுவரையில் 500 க்கும் மேற்பட்ட தொழிலியல் வழக்குகளைக் கையாண்டு, தீர்ப்பு வழங்கிய பெண்மணியாக ராஜேஸ்வரி விளங்குகிறார்.

மலேசிய வரலாற்றில் சம்பள பேச்சுவார்த்தை மன்றத்தில் மிக உயரியப் பொறுப்பை வகிக்கும் முதலாவது இந்தியப் பெண்மணியாக ராஜேஸ்வரி திகழ்கிறார்.

ராஜேஸ்வரியின் பரந்த அனுபவம், சட்டத்துறையில் அவர் கொண்டுள்ள நிபுணத்துவம், புதிய பொறுப்பில் அவரை மேலும் சிறக்க வைக்கும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS