ஜாசீன், பிப்.13-
மலாக்கா, ஜாசீன், உம்பாயில் கம்போங் பெராங்கான் எனாம் எனுமிடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர். அவர்களில் நால்வர் சிறார்கள். இன்று அதிகாலை 1.40 மணியளவில் அழைப்பு கிடைத்து மெர்லிமாவ் மற்றும் பாடாங் தெமு தீயணைப்பு, மீட்பு நிலையங்களின் 12 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மலாக்கா தீயணைப்பு, மீட்புத்துறை அறிக்கையொன்றின் வழி தெரிவித்தது.
சம்பவ இடத்தைச் சென்றடைந்த போது, வீடு 80 விழுக்காடு தீயில் சேதமடைந்து விட்டதாக அது கூறியது. அவ்வீட்டில் இருந்து ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்கள் 37 வயதான லைலா ஃபாதினா முஸ்தபாவும் அவரது 13, 7, 6 மற்றும் 4 வயதுடைய பிள்ளைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்மாதுவின் கணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஜாசீன் மாவட்ட காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ருஸ்லி மாட் அத்தகவலை வெளியிட்டார்.