கோலாலம்பூர், பிப்.13-
வானொலி சமூகத்தைப் பிளவுபடுத்தும் ஒன்றாக இல்லாமல் பின்னணியைப் பொருட்படுத்தாமல் ஒன்றிணைக்கும் முகவராகத் தொடரும் என தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்திருக்கிறார். அறிவைப் பரப்புவதற்கும் அனைத்து மக்களிடையே ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கும் வானொலி முக்கியப் பங்காற்றுகிறது. மக்களுக்குத் தேவையான தகவல், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் கல்வி சார்ந்த விஷயங்களை வழங்க வானொலி மிக முக்கியமான ஊடகமாக நெடுங்காலமாகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எப்போதும் சிறிதும் சளைக்காது மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கி வரும் அனைத்து வானொலி ஊழியர்களுக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். இன்று அனுசரிக்கப்படும் உலக வானொலி தினத்தையொட்டி ஃபாமி ஃபாட்சீல் தமது முகநூலில் அவ்வாறு கூறியிருந்தார்.