கோலாலம்பூர், பிப்.13-
உள்நாட்டு வெள்ளை அரிசியின் விலையை கிலோவுக்கு 2 ரிங்கிட் 60 சென்னாக அரசாங்கம் நிலை நிறுத்தியிருக்கிறது. சந்தையில் அதன் விலையை நிலைப்படுத்தவும் தொடர்ச்சியான கையிருப்பை உறுதிச் செய்யவும் அவ்வாறு செய்யப்படுவதாக விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் சாபு விளக்கினார். கையிருப்பு பிரச்னையைக் களைய உதவும் ஆக்ககர நடவடிக்கையாக இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு 150 மில்லியன் ரிங்கிட் உற்பத்தித் செலவை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு 26 ரிங்கிட் விலையிலான 10 கிலோகிராமுடைய 24 மில்லியன் அரிசி மூட்டைகள் சந்தையில் இருக்கும். இது விவசாயிகள், உற்பத்தியாளர்கள், பயனீட்டாளர்கள் ஆகிய அனைவருக்கும் நன்மையானதாகவும் ஒரு தீர்வாகவும் அமையும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அதே சமயம் அந்நடவடிக்கை சந்தையில் உள்நாட்டு அரிசி கையிருப்பு விரைவாக பழைய நிலைக்குத் திரும்புவதை உறுதிச் செய்யும். அது மக்களின் சுமையையும் குறைக்கும் என முகமட் சாபு மேலும் கூறினார்.