சுங்கை பட்டாணி, பிப்.13-
தைப்பூச விழாவையொட்டி சுங்கைபட்டாணி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான கோவிலின் வெள்ளி இரதம், நேற்று மாலையில் பக்தர்களுக்கு அருள்காட்சி தந்தும், அவர்களின் அர்ச்சனைகளை ஏற்றும் இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் தேவஸ்தான திருக்கோவிலை வந்தடைந்தது.
நேற்று சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மாலை 7 மணியளவில் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதரராய், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, வெள்ளி இரதத்தில் எழுந்தருளி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில், வெள்ளி இரத ஊர்வலம், மேளதாள, நாதஸ்வர இசை முழங்க, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ சுங்கைபட்டாணி நகரை நோக்கி புறப்பட்டது.
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் முன் சமிக்ஞை விளக்கு பகுதி, இராமசாமி வர்த்தகத் தலம், முத்தையாஸ் கேஸ் & கேரி முன்புறம், UTC கட்டடத்தின் முன்புறம், ஸ்ரீ மலேசியா தங்கும் விடுதி முன்புறம் என வெள்ளி இரதம் மொத்தம் 15 இடங்களில் நின்று செல்வதற்கும், பக்தர்கள் அர்ச்சனை செய்வதற்கும் வகை செய்யப்பட்டது.
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டபோது பக்தர்கள் பலர் ‘கந்த சஷ்டி”கவசத்தை பாராயணம் செய்தவாறு, மெய்யுருக, தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.
இரத ஊர்வலத்தின் போது வழி நெடுகிலும் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு உணவும் குடிநீர்ப் பானமும் வழங்கப்பட்டது.
முத்தையாஸ் கேஸ் & கேரி, Top Flower ஶ்ரீ அம்பாள் மூர்த்தி அப்பளசாமி, மஇகா சுங்கைபட்டாணி தொகுதித் தலைவர் ஆர்.எஸ்.தில்லை உட்பட பல அமைப்புகள் தண்ணீர் பந்தல்களை அமைத்து பக்தர்களின் தாகத்தைத் தீர்த்தனர்.
தொழிலதிபரும் நன்கொடை நெஞ்சருமான ஶ்ரீ அம்பாள் மூர்த்தியின் தண்ணீர் பந்தல் பக்தர்களின் பெரும் கவன ஈர்ப்பதாக அமைந்தது. முருகனின் சிலையை தாங்கி, வண்ணக் கோலமாக அந்த தண்ணீர் பந்தல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, வெள்ளி இரதப்புறப்பாட்டிற்கு முன்னர் தேவஸ்தானத்திற்கு நன்கொடை வழங்கிய நல்நெஞ்சங்கள், , தேவஸ்தான அறங்காவலர்கள்,தேவஸ்தான முன்னாள் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு தேவஸ்தானம் தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி, மாலை அணிவித்து சிறப்பு செய்தது.
மூன்று நாள் தைப்பூச விழா வெகுசிறப்பாக நடைபெறுவதற்கு காவல் துறையினரும், ரேலா படையினரும் பெரும் பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.