கோலாலம்பூர், பிப்.13-
அரசாங்க கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் அதிகாரத்துவ அலவலகங்களில் மலேசியாவின் ஜாலோர் கெமிலாங் கொடி மிக அழுக்காகவும், கிழிந்தும், நைந்துப்போன நிலையில் பறக்கவிடப்பட்டு, அவமதிப்பு செய்யப்பட்டு வருவது குறித்து புகிட் பெண்டேரா எம்.பி. ஷெர்லீனா அப்துல் ரஷிட் நாடாளுமன்றத்தில் இன்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மலேசியாவின் தேசியக் கொடி மிக அலங்கோலமாக அவமதிக்கப்பட்டு வருவது குறித்து அந்தப் பெண் எம்.பி. தமது கவலையை வெளிப்படுத்தினார்.
வெளிநாட்டுக் கொடியைத் தாங்கிப் பிடித்தால், அல்லது பறக்க விட்டால் வெகுண்டு எழுந்து, கோபம் அடையும் மலேசியர்கள், நாட்டின் சொந்தக் கொடியை இந்த அலங்கோலத்தில் வைத்திருப்பது ,அவர்களின் பாசாங்குத்தனத்தை காட்டுகிறது என்று ஷெர்லினா சாடினார்.
கம்பத்தில் கம்பீரமாக, ஒய்யாரமாக பறக்க வேண்டிய ஜாலோர் கெமிலாங், வெயில், மழை போன்ற காலத்தில் நல்ல முறையில் பாதுகாக்காமல், அப்படியே விட்டுவிடுவது குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை என்றும், நம்முடைய தேசப்பற்று எங்கே போனது என்றும், அவர் வினவினார்.