சந்தேகப் பேர்வழிகளுக்கு அடைக்கலம் தந்த நபருக்கு ஈராயிரம் ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர், பிப்.14-

கடந்த ஜனவரி 29 ஆம் தேதி சீனப்புத்தாண்டு அன்று அதிகாலையில் கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமாவில் ஒரு கேளிக்கை மையம் முன்புறம் நடந்த வாகன மோதல் அராஜக செயலில் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகப் பேர்வழிகள், போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க அவர்களுக்கு அடைக்கலம் தந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

40 வயது S. தினேஷ் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் நபிஹா டான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர், கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி , நெகிரி செம்பிலான், ஜெலுபுவில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதியில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளுக்கு அடைக்கலம் தந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகள் யாரென்று தனக்கு தெரியாது என்றும், தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருக்கும் பெரும்பாலான தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்த சந்தேகப் பேர்வழிகளுக்கு அடைக்கலம் தந்ததாகவும் தினேஸ் தனது கருணை மனுவில் தெரிவித்தார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS