பூச்சோங், பிப்.14-
அமெரிக்காவிற்கான மலேசிய தூதர் பதவியை வகிப்பதற்கு ஒருவர் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எனினும் வழக்கமான நடைமுறையின்படி, சம்பந்தப்பட்ட தூதர் வேட்பாளரை மாமன்னர் அங்கீகரிக்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் மலேசியத் தூதராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி வகித்து வந்துள்ள முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஸிஸ் பதவிக் காலம், கடந்த பிப்ரவர் 8 ஆம் தேதியுடன் முடித்துக்கொள்ளப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்தப் பதவி காலியாக உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை ஏற்படுத்தித் தருவதற்கு தூதர் என்ற முறையில் நஸ்ரி தவறியதன் காரணமாக அவர் பதவி மீட்டுக்கொள்ளப்பட்டு விட்டதாக டிஏபி பாங்கி எம்.பி. ஒங் கியான் மிங் அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.