புத்ராஜெயா, பிப்.14-
முஸ்லிம் அல்லாதவர்களின் விவகாரங்களை கையாளுவதற்கும், நிர்வகிப்பதற்கும் பிரத்தியேகமாக ஓர் அமைச்சர் பதவி உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை டிஏபியின் நிலைப்பாடு அல்ல என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாசில் விளக்கம் அளித்துள்ளார்.
அந்தப் பரிந்துரையை , டிஏபி ரவுப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யூ ஹுய் முன்வைத்த போதிலும் அது டிஏபியின் ஒட்டுமொத்த நிலைப்பாடு அல்ல என்று ஃபாமி குறிப்பிட்டார்.
எனினும் அந்த பரிந்துரையை இன்று கூடிய அமைச்சரவை நிராகரித்து விட்டதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கியிருப்பதை ஃபாமி சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் மாமன்னர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ரவூப் எம்.பி. சௌ யூ ஹூய், தற்போது பிரதமர் துறையில் சமய விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சரின் பொறுப்பு, இரண்டாக பிரிக்கப்பட்டு, முஸ்லிம் அல்லாதவர்களுக்கான விவகாரங்களைக் கவனிப்பதற்கு ஓர் அமைச்சர் பதவி உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்து இருந்தார்.
ரவூப் எம்.பி.யின் அந்த பரிந்துரை தொடர்பில் விளக்கம் அளிக்கையில் ஃபாமி இதனைத் தெரிவித்தார்.