புத்ராஜெயா, பிப்.14-
2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவை மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் இன்று இணக்கம் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் துறைக்கு பொறுப்பேற்றுள்ள உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் சொஸ்மா சட்டத்தை மிக விரிவாக மீள் ஆய்வு செய்யுமாறு உள்துறை அமைச்சரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார் என்று ஃபாமி ஃபட்சில் குறிப்பிட்டார்.
சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 32 கைதிகளை பார்ப்பதற்கு அவர்களின் குடும்பத்தினர் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, கடந்த வாரம் அந்த கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் சுங்கை பூலோ சிறைச்சாலையின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர்.
அதேவேளையில் அந்த கொடுங்கோல் சட்டத்தை மறு ஆய்வு செய்யக்கோரி, சுவாராம் இயக்கத்தின் மூலமாக அவர்கள் கடந்த வாரம் திங்கட்கிழமை உள்துறை அமைச்சில் ஒரு மனு ஒன்றை சமர்ப்பித்தனர்.