சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டார்

குவாந்தான், பிப்.15-

உணவு விநியோக வர்த்தகப் பெண்மணி ஒருவர், மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலத்திற்கு அருகில் சுங்கை குவாந்தானில் ஆற்றோரத்தில் பிணமாகக் கிடந்தது தொடர்பில் இந்த கொலையில் தொடர்புடையவர் என்று நம்பப்படும் 53 வயதுடைய சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த சந்தேகப் பேர்வழி, இன்று அதிகாலை 5.30 மணியளவில் கோலத் திரங்கானு, கோங் பாடாக், Wakaf Tembesu வீடமைப்புப் பகுதியில் கைது செய்யப்பட்டார் என்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் சஹாரி வான் பூசு தெரிவித்தார்.

பகாங் போலீசாரும், திரெங்கானு போலீசாரும் இணைந்து அந்த நபரைக் கைது செய்துள்ளனர். அந்த நபரைக் கைது செய்தது மூலம் ஒரு மோதிரம், ரொக்கப்பணம், ஆடைகள் மற்றும் சில ஆவணங்கள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த நபர், இன்று சனிக்கிழமை குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டுள்ளதாக ஏசிபி வான் சஹாரி தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் 37 வயது மாது நோர்ஷமீரா சைனால் என்பவர் மிகக் கோரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியை கைது செய்தது மூலம் இக்கொலைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ஏசிபி வான் சஹாரி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS