புத்ராஜெயா, பிப்.15-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படும் அரசாணை உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக நடப்பு அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஆட்சியாளர்கள் மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சீல் மறுத்துள்ளார்.
இத்தகைய தவறான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பி வரும் தரப்பினரை அடையாளும் காணும் முயற்சியில் மலேசிய பல்லூடக ஆணையமான MCMC மற்றும் போலீசார் ஈடுபட்டு வருவதாக ஃபாமி விளக்கினார்.
அப்படி ஏதேனும் வாக்களிப்பு நடந்து இருக்குமானால், ஆட்சியாளர்கள் அனைவரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்க வேண்டும். ஒன்பது ஆட்சியாளர்களின் வருகை இருந்திருக்க வேண்டும்.
இருப்பினும் நடப்பு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், வெளிநாட்டில் சிகிச்சைப் பெற்று வருவதால் 268 ஆவது ஆட்சியாளர்கள் மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று ஃபாமி விளக்கினார்.
அண்மையில் நடைபெற்ற ஆட்சியாளர்களின் மாநாடு தொடர்பாக சுல்தான் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமான முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களில் அவரது மாட்சிமையைத் தங்கியவர்கூட, அங்கு இல்லை என்பதை தெளிவாக காணலாம். மாநாட்டில் ஒன்பது வாக்குகள் இல்லை என்பது இது காட்டுகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க ஒன்பது வாக்குகளில் 7 க்கு 2 என வாக்குகள் பதிவாகியிருப்பதாக கூறி பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளரான ஃபாமி தெளிவுபடுத்தினார்.
எனினும் இந்த பொய் செய்தியை பரப்பிய நபரை MCMC-யும், போலீசாரும் அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.