கோல லங்காட், பிப்.15-
சிலாங்கூர், கோல லங்காட்டில் மின் கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்யும் e-waste தொழிற்சாலை ஒன்றில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 50 டன் எடை கொண்ட தோட்டா உறைகள் உட்பட தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் மத்திய பிராந்தியத்திற்கான கலாட் படை போலீசார் மற்றும் சுற்றுச்சூழல் இலாகா மேற்கொண்ட இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் இவ்விவகாரம் அம்பலமாகியுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குப் பிரிவின் துணை இயக்குநர் டத்தோ முகமட் சுஸ்ரின் முகமட் ரோதி தெரிவித்தார்.
50 பைகளில் இந்த தோட்டாக்கள் நிரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பையும் ஒரு டன் எடை கொண்டதாகும். அந்த தோட்டாகள் மறுசுழற்சி செய்யப்பட்டு, அவற்றின் ஈயத்தன்மையிலான உலோகத்தை அகற்றுவதற்கு மறுசுழற்சிக்கு கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த தோட்டாக்கள் மலேசியாவில் எடுக்கப்பட்டது அல்ல. அவை எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக முகமட் சுஸ்ரின் குறிப்பிட்டார்.