பினாங்கு, பிப்.15-
மலேசிய இந்தியர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை மீதான புள்ளி விவரம், மறு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று மலேசிய புள்ளி விவர இலாகாவை மேலவை உறுப்பினர் டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
மலேசிய இந்திய முப்படை வீரர்கள் சங்கத்தின் பினாங்கு மாநில கிளையின் 15 ஆவது ஆண்டுக் கூட்டத்தை இன்று பினாங்கில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டாக்டர் லிங்கேஸ்வரன் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
மலேசிய புள்ளி விபர இலாகாவின் 2024 ஆம் ஆண்டு புள்ளி விபரங்களின்படி மலேசியர்களின் மொத்த மக்கள் தொகையான 30.7 மில்லியன் எண்ணிக்கையில் இந்தியர்களின் எண்ணிக்கை 6.5 விழுக்காடு என்று அறிவித்துள்ளது. அதாவது இந்தியர்களின் எண்ணிக்கை 2 மில்லியன் என்று குறிப்பிட்டுள்ளது.
தைப்பூச விழாவில் குறிப்பாக பத்துமலைத் திருத்தலம் போன்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்று கூடுகின்ற இந்தியர்களின் எண்ணிக்கை, புள்ளி விபர இலாகா வழங்கிய எண்ணிக்கையை விட மிஞ்சும் அளவிற்கு உள்ளது.
எனவே இந்தியர்களின் உண்மையான எண்ணிக்கை விவரங்களை அறிய, நடப்பு எண்ணிக்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
இதே போன்று போலீஸ், இராணுவம் உட்பட அரசாங்க சேவையில் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.
பத்து லட்சத்துக்கும் அதிகமான பொதுச்சேவை ஊழியர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை, 4.11 விழுக்காடு என்பது மனநிறைவு அளிக்கும் வகையில் இல்லை. பொதுச் சேவைத்துறையில் இந்தியர்களின் பங்கேற்பு கணிசமான அளவில் அதிகரிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.