சுங்கை பட்டாணி, பிப்.15-
வரும் பொதுத் தேர்தலில் கெடா மாநில அரசாங்கத்தை கைப்பற்றுவது, ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் என்று மாநில பக்காத்தான் ஹராப்பானுக்கு தலைமையேற்றுள்ள டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் பிரகடனம் செய்துள்ளார்.
இன்று 2025 ஆம் ஆண்டுக்கான கெடா மாநில ஒற்றுமை அரசாங்கத்தின் மாநாட்டிற்கு தலைமையேற்று பிரதான உரை நிகழ்த்துகையில் ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ள இலக்குகளையும், அதன் செயல் நடவடிக்கைகளையும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சைபுடின் விளக்கினார்.
கெடா மாநில ஒற்றுமை அரசாங்கம் மாநாடு, மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாகும். ஒற்றுமை அரசாங்கத்தின் உள்ளடக்கத்தில் நடைபெறும் முதலாவது மாநாடாக கெடாவின் ஒற்றுமை அரசாங்க மாநாடு விளங்குகிறது சைபுடின் குறிப்பிட்டார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலும் இணைந்து இருப்பதால் அக்கூட்டணியும், பக்காத்தான் ஹராப்பானும் ஒன்றிணைந்து முழு வீச்சாக தங்களது பலத்தை வெளிப்படுத்துவது மூலம் அடுத்த பொதுத் தேர்தலில் கெடா மாநில அரசாங்கத்தை கைப்பற்ற முடியும் என்று தாங்கள் இலக்கு கொண்டு இருப்பதாக சைபுடின் குறிப்பிட்டார்.
அதேவேளையில் தேசிய முன்னணிக்கும், பக்காத்தான் ஹரப்பானுக்கும் அதிக அளவிலான ஒற்றுமைகள் காணப்படுக்கின்றன .கெடா மாநிலத்தில் இவ்விரு கூட்டணியின் நோக்கம் என்ன என்பதை இம்மாநாட்டின் மூலம் தெளிவுப்படுத்தப்பட்டிருப்பதாக டத்தோ ஸ்ரீ சைஃபுடின் குறிப்பிட்டார்.
இதன் பிறகு , கெடா மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கத்தின் திட்டங்கள்,பல நிகழ்வுகள் , அரசியல் சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக நடைபெறுவதற்கு செயலகம் அமைக்கப்படும் என்றார் .
ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள உறுப்புக்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படவும், தங்கள் பலத்தை முழுமையாக திரட்டவும், அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி செல்லவும், தகவல்களை பறிமாறிக் கொள்ளவும், கெடா மாநில செயலகம் முழுமையான பங்களிப்பை வழங்கும் என்று இன்றைய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கெடா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ சைபுடின் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் கெடா மாநில பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.