கிள்ளான், பிப்.16-
கோபத்தைத் தூண்டும் சொற்களையோ செயல்களையோ தவிர்க்குமாறு நாட்டில் உள்ள பல்வேறு இன மக்களை சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் அறிவுறுத்தியுள்ளார். கோத்தா வாரிசானில் மக்காச்சோள விற்பனையாளர் ஒருவர் இனவாத வாசகங்கள் அடங்கிய அறிவிப்புப் பலகையை வைத்தது தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்தே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒருவரையொருவர் மதித்து நடக்க வேண்டும் என்றும், இன உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இஸ்லாத்தில் பல இனங்கள், மதங்கள் இருந்தாலும் ஒற்றுமையை வலுப்படுத்துவது ஊக்குவிக்கப்படுகிறது என்றும், பன்முகத்தன்மையை மதித்து நடக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். மடானி அரசாங்கமும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.