கோலாலம்பூர், பிப்.17-
Keling-கிற்கு சோளத்தை விற்க மாட்டேன் என்று இந்தியர்களை இழிவுப்படுத்தும் தன்மையில், இனத்துவேஷ வாசகத்தை உள்ளடக்கிய அறிவிப்பு அட்டையை காட்சிக்கு வைத்திருந்த சோள வியாபாரி ஒருவர், தனது செயலுக்காக மன்னிப்புக் கோரினார் என்று ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.
மலேசிய மக்களிடம் குறிப்பாக, இந்தியர்களின் மனதை புண்படுத்திய அந்த சோள வியாபாரி, தனது X பதிவில் மன்னிப்பு கோரியதாகவும், நாட்டின் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடிய இத்தகைய செயலில் ஈடுபடப் போவதில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளதாக டத்தோ ஆரோன் குறிப்பிட்டார்.
இப்பிரச்னையை தீர்ப்பதில் ருக்குன் தெதாங்கா அதிகாரி Encik Roseman மற்றும் Encik Syawal நடுவராக செயல்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ,சிப்பாங், கோத்தா வாரிசான், Holiday In ஹோட்டலுக்கு முன்புறம் உள்ள ஒரு சிறிய ஸ்டால் அங்காடி கடையில் மலாய்க்கார ஆடவர் ஒருவர், மன்னிக்கவும், இந்த சோளம், Keling-கிற்கு விற்கப்படுவதில்லை என்று எழுதப்பட்ட வாசக அறிக்கையைத் தனது ஸ்டாலின் முன் மாட்டப்பட்டு இருந்தது குறித்து இந்தியப் பெண்மணி ஒருவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
அவர் வெளியிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலானது.
பணம் ஈட்டுவதற்கு வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள்கூட, இந்தியர்களை இழிவுப்படுத்தும் இனத்துவேசத்தில் ஈடுபட்டு வருவது, மலேசியா எதனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று பலர் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக அந்த சோள வியாபாரியுடன், சிப்பாங்கில் உள்ள ஓர் உணவகம் ஒன்றில் இந்திய சமூகத் தலைவர்கள், ஒற்றுமைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக டத்தோ ஆரோன் தெரிவித்தார்.
எனினும் இனத்துவேஷமாக செயல்படட் அந்த வியாபாரி, மன்னிப்பு கேட்ட விவகாரத்தை ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் வெளியிட்டாரே இது, தவிர மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க அந்த வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதைச் சொல்லவில்லை.