கோத்தா பாரு, பிப்.18-
கிளந்தானின் உள்ள பெண்கள், தங்களின் மனம் கவர்ந்த வாழ்க்கைத் துணைவனாக பாகிஸ்தான் ஆடவர்களை தேர்வு செய்வதற்கு தீவிரம் காட்டி வரும் அதேவேளையில் கிளந்தானில் உள்ள ஆண்கள், அண்டை நாடான தாய்லாந்துப் பெண்களை இலக்காக கொண்டு, வாழ்க்கைத்துணையை அமைத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று மலேசிய குடிநுழைவுத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிளந்தான் மாநிலத்தில் ஆண்களும், பெண்களும் தங்கள் வாழ்க்கைத்துணையை அமைத்துக்கொள்வதற்கு பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த மனுதாரர்கள், மலேசியாவில் தங்குவதற்கு வசிப்பிட அனுமதி கேட்டு, அதிகமான விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக கிளந்தான் குடிநுழைவு இலாகா கூறுகிறது.
அந்நிய நாட்டவர் குறிப்பாக பாகிஸ்தான் ஆடவர்கள், தாய்லாந்து பெண்கள் சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்று கிளந்தான் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் முகமட் யூசோப் கான் முகமட் ஹாசான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கிளந்தானில் உள்ள ஆண்கள், தாய்லாந்தைச் சேர்ந்த 175 பெண்களை திருமணம் புரிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2023 இல் 341 பேராகவும், கடந்த ஆண்டில் 308 பேராகவும் அதிகரித்துள்ளது.
இதேபோன்று கிளந்தான் மாநிலத்தில் உள்ள பெண்கள், பாகிஸ்தான் ஆடவர்களை திருமணம் செய்து வரும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 2022 ஆண்டில் 31 பேராகவும், 2023 ஆம் ஆண்டில் 27 பேராகவும், 2024 ஆம் ஆணடில் 34 பேராகவும் கிளந்தான் பெண்கள், பாகிஸ்தான் ஆடவர்களை கரம் பிடித்துள்ளனர் என்று முகமட் யூசோப் கான் தெரிவித்தார்.